சென்னை பறக்கும் ரயிலில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்.. மெட்ரோ வசம் சென்றதும் பயணிகளுக்கு என்னென்ன பலன்?
சென்னையின் முக்கிய புறநகர் போக்குவரத்து சேவைகளில் ஒன்றான பறக்கும் ரயில் எனப்படும் MRTS, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ள நிலையில், சுமார் 90 நாட்களுக்குள் ஒப்படைப்பு நடவடிக்கைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் வந்த பிறகு, MRTS நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பழுதடைந்துள்ள லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் சீரமைக்கப்படுவதுடன், தேவையான இடங்களில் புதிய வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
மேலும், நிலையங்களின் பெரும்பகுதி பயணிகள் பயன்பாட்டுக்காக மேம்படுத்தப்பட உள்ளது. கிடைக்கும் இடங்களில் வணிக பயன்பாட்டை உருவாக்கி வருவாய் ஈட்டும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதன் மூலம் நிலையங்களின் பராமரிப்பு மற்றும் பயணிகள் வசதிகள் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், எதிர்காலத்தில் புதிய ரயில்கள் அறிமுகப்படுத்துதல், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல், நிலையங்களை நவீனமயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
MRTS சேவை சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை சுமார் 25 கி.மீ. தொலைவுக்கு செயல்பட்டு வருகிறது. வேளச்சேரி-பரங்கிமலை இணைப்பும் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகளுடன் சிறந்த இணைப்பை உருவாக்குவது இந்த ஒருங்கிணைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதனால், பல ஆண்டுகளாக பழைய தோற்றத்துடன் காணப்பட்ட MRTS நிலையங்கள் படிப்படியாக நவீன வசதிகளுடன் மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
