சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸ்.. தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர கண்காணிப்பு!
சென்னையில் நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவதை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், சாலைகளில் விபத்து ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் வகையிலும் சில பகுதிகளில் இளைஞர்கள் நள்ளிரவு நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதையடுத்து, பைக் ரேஸ் நடைபெறும் வாய்ப்புள்ள பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும் முக்கிய சாலைகள் மற்றும் பைக் ரேஸுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக காவல்துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நள்ளிரவு நேரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு, விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும், பைக் ரேஸ் நடத்துபவர்கள் மட்டுமின்றி, அதில் பங்கேற்பவர்கள் மற்றும் இதுபோன்ற ஆபத்தான செயல்களுக்கு துணைபோகும் நபர்களையும் கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரவு நேர ரோந்து பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நள்ளிரவு நேரங்களில் பைக் ரேஸ் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
