கோவையில் இன்று மக்கள் குறைதீர் முகாம்! நேரில் மனு அளிக்கலாம்
பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசு நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
அக்டோபர் 22ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வு, அக்டோபர் 23ஆம் தேதி காலை 9 மணி வரை நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அன்னூர் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிய உள்ளார்.
இந்த முகாமில் பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளையும், அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளையும் அதிகாரிகளிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.
அரசுத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதுடன், மக்களின் தேவைகளை அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளிடம் நேரடியாகத் தீர்வு கோருவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
எனவே, அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளிடம் சமர்ப்பித்து இந்த முகாமைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
