காவல் நிலையங்களுக்கு மாதம் ரூ.50,000 வரை நிதி! தமிழக அரசு புதிய அறிவிப்பு
தமிழகத்தில் காவல் நிலையங்களின் அன்றாட நிர்வாகச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, அவற்றுக்கு வழங்கப்படும் மாதாந்திரத் தற்செயல் நிதியை மாநில அரசு உயர்த்தியுள்ளது. இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அறிவிப்பின்படி, காவல் நிலையங்களின் வகை மற்றும் பணிச்சுமையைப் பொறுத்து மாதந்தோறும் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை நிதி வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்பு குறைந்த வகை காவல் நிலையங்களுக்கு மாதம் ரூ.3,750, நடுத்தர வகைக்கு ரூ.6,000, அதிகப் பணிச்சுமை கொண்ட காவல் நிலையங்களுக்கு ரூ.8,250 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த நிதி உயர்த்தப்பட்டுள்ளதால், காவல் நிலையங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வது எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எழுதுபொருட்கள், அலுவலகப் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் பிற வழக்கமான நிர்வாகச் செலவுகளுக்கு இந்தத் தொகையைப் பயன்படுத்த முடியும்.
காவல் நிலையங்களின் செயல்பாடுகளுக்குத் தேவையான அடிப்படைச் செலவுகளை அரசின் நிதி மூலமாகவே மேற்கொள்வது இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் அன்றாடத் தேவைகளுக்காகப் பொதுமக்களிடம் பணம் பெறும் சூழலைத் தவிர்க்கவும், அதுதொடர்பான முறைகேடுகளைக் கட்டுப்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவல் நிலையங்களின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதோடு, காவல்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் முயற்சியாகவும் இந்த நிதி உயர்வு பார்க்கப்படுகிறது.
