தமிழகத்தில் மழை எச்சரிக்கை.. 16 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 16 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல், வட தமிழகப் பகுதிகளின் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. மேலும், மன்னார் வளைகுடா முதல் மத்திய மராட்டியம் வரை தமிழகம் மற்றும் உள் கர்நாடகா வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் வரும் நாட்களிலும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையும் தெரிவிக்கிறது.
