இந்தியா–ஜப்பான் கைகோர்ப்பு.. சுற்றுச்சூழலை காக்க வரப்போகும் புதிய பசுமை திட்டங்கள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து செயல்படுத்தும் Joint Crediting Mechanism (JCM) தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த திட்டத்திற்கான Operational Manual கடந்த செப்டம்பர் 30-ம் தேதி புதுடெல்லியில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், இந்தியாவில் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
என்ன இந்த JCM திட்டம்?
இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து குறைந்த கார்பன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன் மூலம் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைப்பது, காலநிலை நிதியை ஈர்ப்பது மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த திட்டம் Paris Agreement-ன் Article 6.2 கீழ் செயல்படுகிறது. 2025-ம் ஆண்டு இந்தியா–ஜப்பான் இடையே இதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், 2026 ஜூன் மாதத்தில் அதன் செயல்பாட்டு விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தற்போது Operational Manual வெளியிடப்பட்டுள்ளதால், திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான அடுத்த கட்டம் தொடங்கியுள்ளது.
மேலும், திட்டங்களின் மூலம் உருவாகும் கார்பன் குறைப்பு தொடர்பான JCM credits-ஐ கண்காணித்து, அவற்றின் வெளியீடு மற்றும் அங்கீகாரத்திற்கான நடைமுறைகளும் இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சேர்த்து, புதிய பசுமை தொழில்நுட்பங்கள், முதலீடுகள் மற்றும் காலநிலை சார்ந்த திட்டங்களுக்கு இந்த ஒத்துழைப்பு உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
