செய்திகள்

சுதந்திர தின விருந்துக்காக யானைகள் வேட்டையா?.. போட்ஸ்வானா அரசின் முடிவுக்கு விலங்கு நல அமைப்புகள் எதிர்ப்பு!

சுதந்திர தின விருந்துக்காக யானைகள் வேட்டையா?.. போட்ஸ்வானா அரசின் முடிவுக்கு விலங்கு நல அமைப்புகள் எதிர்ப்பு!

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடியது. இதையொட்டி நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில், யானைகள் வேட்டையாடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தின விருந்துக்காக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் சிறப்பு அனுமதி வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 8 மாவட்டங்களில் மொத்தம் 23 யானைகளை வேட்டையாடுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த 23 யானைகளும் உண்மையில் கொல்லப்பட்டனவா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.

வேட்டையாடப்பட்ட யானைகளின் இறைச்சி சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக உள்ளூர் மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போட்ஸ்வானாவில் உலகிலேயே மிகப்பெரிய யானை கூட்டங்களில் ஒன்று காணப்படுகிறது. அங்கு சுமார் 1.30 லட்சத்துக்கும் அதிகமான யானைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் விவசாய நிலங்களுக்கு சேதம் ஏற்படுவதுடன், சில பகுதிகளில் மனிதர்–யானை மோதலும் ஏற்படுவதாக அந்நாட்டு அரசு கூறுகிறது.

இந்த மனிதர்–விலங்கு மோதலை கட்டுப்படுத்தவும், உள்ளூர் சமூகங்களுக்கு பயன் கிடைக்கச் செய்யவும் கட்டுப்படுத்தப்பட்ட வேட்டை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதேநேரத்தில், சுதந்திர தின விருந்துக்காக யானைகளை வேட்டையாடுவது வனவிலங்கு பாதுகாப்புக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் என விலங்கு நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *