செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு இதயப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு!

சபரிமலை பக்தர்களுக்கு இதயப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடல்நலப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கேரள சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் மலையேறுவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்து மருத்துவரிடம் உடற்தகுதி சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்கள், இதய அறுவை சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்தவர்கள், இதய செயலிழப்பு பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி மலையேறக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களது உடல் திறனுக்கு ஏற்ப மெதுவாக மலையேற வேண்டும்; இடையிடையே ஓய்வு எடுக்க வேண்டும்; போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்; வெறும் வயிற்றில் மலையேறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதுடன், தேவையான மருந்துகளையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

மலையேறும் போது நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், அதிக வியர்வை, தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக பயணத்தை நிறுத்தி மருத்துவ உதவியை நாட வேண்டும்.

அவசர உதவிக்கு 04735 203232 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.