ஹால்மார்க் தங்கத்திலும் கலப்படமா? ரீனியம் பவுடர் பயன்படுத்தி மோசடி நடப்பதாக புகார்!
ஹால்மார்க் முத்திரை பெற்ற தங்கத்தின் தூய்மை குறித்தும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. தங்கத்தில் ரீனியம்(Rhenium) பவுடர் பயன்படுத்தி கலப்படம் செய்யப்படுவதாக இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இந்த முறையில் ரீனியம் என்ற உலோகப் பவுடரை தங்கத்துடன் கலந்து அதன் எடையை அதிகரிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதனால் வழக்கமான பரிசோதனைகளில் தங்கத்தின் தூய்மை சரியாகக் கண்டறியப்படாமல் போகலாம் என்றும், சில நகைகள் ஹால்மார்க் முத்திரை பெற்றும் உண்மையான தூய்மையை விட குறைவான தங்கத்தைக் கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக BIS அமைப்பிடம் கடுமையான ஆய்வுகள், திடீர் சோதனைகள் மற்றும் பரிசோதனை முறைகளை மேம்படுத்த வேண்டும் என நகை வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து வரும் நவம்பர் 23ஆம் தேதி BIS அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கம் வாங்கும் பொதுமக்கள் BIS முத்திரை, தூய்மை குறியீடு மற்றும் HUID எண்ணை BIS Care செயலி மூலம் சரிபார்த்து வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
