பிஸ்லெரி குடிநீர் மாதிரி பரிசோதனையில் சர்ச்சை.. நிறுவனம் சொல்வது என்ன?
பிஸ்லெரி குடிநீர் பாதுகாப்பானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குடிநீர் மாதிரியில் பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகக் கூறி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பிஸ்லெரி நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்கியுள்ள நிலையில், நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
கோவாவில் உள்ள பிஸ்லெரி உற்பத்தி ஆலையில் கடந்த 2025 செப்டம்பர் 30ஆம் தேதி 6 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகவும், அதில் 5 மாதிரிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்ததாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றொரு மாதிரியில் ப்ரோமேட் அளவு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம் பதிவாகியிருந்தது. அனுமதிக்கப்பட்ட அளவு 10 மைக்ரோகிராம் ஆகும்.

இதனைத் தொடர்ந்து மறுபரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரியில் ப்ரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருந்ததாகவும், PAHs எனப்படும் வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தனியார் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலும் பரிசோதனை செய்ததில் ப்ரோமேட் அளவு விதிமுறைக்குள் இருந்ததாக பிஸ்லெரி கூறியுள்ளது. இதற்கான அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் FSSAI-க்கு அனுப்பியதாகவும், அதன்பிறகு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், குடிநீர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து 10 கட்ட உற்பத்தி முறையில் 90க்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகள் மேற்கொள்வதாகவும் பிஸ்லெரி விளக்கம் அளித்துள்ளது.
