திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைது – பலர் போலீசாரால் தடுத்து வைப்பு!
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறதா என்பதைப் பார்வையிடுவதற்காக நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் செல்லத் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, தாழையூத்து சோதனைச் சாவடி அருகே போலீசார் அவரைத் தடுத்து கைது செய்தனர்.
முன்னதாக, அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதேபோல், பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பலரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
