செய்திகள்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.இ. பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், புகார் தொடர்பான தகவல்கள் வெளியானபோதே முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு அவருக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வைக் கண்டித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இத்தகைய நிலை ஏற்பட்டால், சாதாரண பெண்களின் பாதுகாப்பு என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அருள் விக்னேஷ், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்படுவதாகவும் மறுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.