6–8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம்! மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட விஜய்

6–8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம்! மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட விஜய்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு விஜய் காலை உணவு பரிமாறினார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் இணைந்து காலை உணவை சாப்பிட்டார்.

மாணவர்களின் ஊட்டச்சத்து, உடல்நலம், பள்ளி வருகை மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக 2026–27 நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்ந்துள்ளது.

முதல் நாளில் மாணவர்களுக்கு சாம்பார், வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவை காலை உணவாக வழங்கப்பட்டன.

ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தில் ரவா உப்புமா கிச்சடி, சேமியா உப்புமா, சேமியா காய்கறி கிச்சடி, காய்கறி அரிசி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் சாதம், இனிப்பு பொங்கல் மற்றும் சேமியா கேசரி உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தில் மேலும் புதிய உணவு வகைகளைச் சேர்ப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *