“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!” – விஜய்க்கு ஸ்டாலின் காட்டமான பதில்
ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கை முன்வைத்து முதலமைச்சர் விஜய் எழுப்பிய கேள்விகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய விஜய், ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியதுடன், இந்த விவகாரம் குறித்து ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள மு.க.ஸ்டாலின், ஜெம் வீரமணி வழக்கு குறித்து தான் ஏற்கனவே விரிவாக விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைப்பதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், திமுக ஆட்சியில் யாரையும் காப்பாற்றுவதற்காக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று ஸ்டாலின் மறுத்துள்ளார். வழக்கு தொடர்பாக தாம் ஏற்கனவே பேசியிருப்பதாகவும், செய்திகளை படித்திருந்தால் விஜய்க்கு அது தெரிந்திருக்கும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
விஜய் தனது பிரசார உரையில் திமுகவும் பாஜகவும் ஒன்றுபோல் செயல்படுவதாக விமர்சித்திருந்த நிலையில், அதற்கும் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தவெக-வின் அரசியல் நிலைப்பாடு மற்றும் பாஜக தொடர்பான செயல்பாடுகள் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே, ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கில் வீரமணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரது சொத்துகள் தொடர்பாகவும் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு, ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான விசாரணை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்திலும் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
