துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை! ரூ.33.60 கோடி மதிப்பிலான தங்கம், பணம் திருட்டு!
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கெனரா வங்கி கிளையில், செப்டம்பர் 24ஆம் தேதி ஆயுதம் ஏந்திய 5 பேர் கொண்ட கும்பல் மிகப்பெரிய கொள்ளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்த அந்த கும்பல், வங்கி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பிணைக்கைதிகளாக பிடித்ததாக கூறப்படுகிறது.
வங்கியில் அடமானமாக வைக்கப்பட்டிருந்த சுமார் 23.80 கிலோ தங்கம் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.33.60 கோடி என கூறப்படுகிறது.
கொள்ளையர்களை தடுக்க முயன்ற பாதுகாப்பு காவலர் மீது துப்பாக்கிப் பிடியால் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், வங்கியின் உள்ளே மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் ஜாம்ஷெட்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
