கர்ம வினைகளை நீக்கி அருள்பாலிக்கும் லலிதாம்பிகை.. கோவையில் நவராத்திரி சிறப்பு வழிபாடு!
கோவை பெரிய தடாகம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சாரதா நவராத்திரி உற்சவம் இந்தாண்டும் சிறப்பாக நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 11-ம் தேதி தொடங்கும் நவராத்திரி விழா, அக்டோபர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து பேசிய சுவாமி ஜகாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள், ஆண்டுதோறும் சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரி என இரண்டு நவராத்திரி உற்சவங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார். புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சாரதா நவராத்திரி விழா, ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுவதாகவும் கூறினார்.
இந்த நவராத்திரி விழாவின் முக்கிய சிறப்பாக தசமகா வித்யா வழிபாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறும் இந்த வழிபாடு, கோவை பெரிய தடாகத்தில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி நாட்களில் அன்னை பராசக்தி, லலிதா தர்பார் என்ற அரசாட்சி அம்சத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் காட்சியளிப்பதாக சுவாமி ஜகாத்மானந்தா சரஸ்வதி தெரிவித்தார்.
மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை மனதில் வைத்து அன்னையை வழிபடுவதன் மூலம் மனநிறைவும் நம்பிக்கையும் பெறலாம் என்றும் அவர் கூறினார். ஜாதக ரீதியாக தாங்கள் அனுபவித்து வரும் கர்ம வினைகள் நீங்கி, அஷ்ட ஐஸ்வர்யம், நீண்ட ஆயுள், நிறை செல்வம், லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை என்றும் தெரிவித்தார்.
திருக்கோயிலில் அமைந்துள்ள லலிதாம்பிகை தியான மண்டபத்தில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து வழிபடுவதன் மூலம், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற ஆன்மிக நம்பிக்கையும் பக்தர்களிடையே நிலவுகிறது. எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி, வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அக்டோபர் 11 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
