செய்திகள்

சென்னையின் முக்கிய சாலைகள் இனி வேற லெவல்.. GST முதல் தரமணி வரை பிரம்மாண்ட திட்டம்!

சென்னையின் முக்கிய சாலைகள் இனி வேற லெவல்.. GST முதல் தரமணி வரை பிரம்மாண்ட திட்டம்!

சென்னையின் முக்கிய சாலைகளை நவீனமயமாக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (CUMTA) புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன் கீழ் GST சாலை, தரமணி இணைப்புச் சாலை மற்றும் வேளச்சேரி–தாம்பரம் சாலையின் ஒரு பகுதி ஆகியவை ‘மாதிரி நகர்ப்புற போக்குவரத்து வழித்தடங்களாக’ (Model Urban Mobility Corridors) மேம்படுத்தப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மொத்தம் 26.2 கி.மீ. சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 3.7 கி.மீ. தரமணி இணைப்புச் சாலை, 16.2 கி.மீ. மர்மலாங் பாலம் முதல் வாலாஜா சாலை வரையிலான வேளச்சேரி–தாம்பரம் சாலை மற்றும் 5.2 கி.மீ. GST சாலை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

திட்டத்தின் கீழ் அகலமான நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், முறையான பேருந்து நிறுத்தங்கள், பார்க்கிங் வசதிகள், பசுமை வழித்தடங்கள், சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. பேருந்து, மெட்ரோ, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துடன் எளிதாக இணையும் வகையிலும் வழித்தடங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க ஆலோசகரை தேர்வு செய்வதற்கான டெண்டரை CUMTA வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த டெண்டருக்கு அக்டோபர் 30-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தென் சென்னையின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கான வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *