செய்திகள்

ரூ.4,000 கோடி மணல் கொள்ளை வழக்கு.. பிரபல காண்ட்ராக்டருக்கு செக் வைத்த சென்னை ஐகோர்ட்!

ரூ.4,000 கோடி மணல் கொள்ளை வழக்கு.. பிரபல காண்ட்ராக்டருக்கு செக் வைத்த சென்னை ஐகோர்ட்!

ரூ.4,000 கோடி மதிப்பிலானதாகக் கூறப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான விசாரணையில், பிரபல காண்ட்ராக்டர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு நீர்வளத்துறையின் முதல் வகுப்பு ஒப்பந்ததாரரான ஆர்.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ஏ. ராஜ்குமார் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அமலாக்கத்துறை கடந்த 2024-ம் ஆண்டு தமிழக டிஜிபிக்கு அனுப்பிய தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (DVAC) மேற்கொண்டு வரும் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தனக்கு எதிராக எந்தவித கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அவர் கோரியிருந்தார்.

மேலும், அமலாக்கத்துறை அனுப்பிய தகவலில் தன்னை அல்லது தனது நிறுவனத்தை குறிப்பிட்டு எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தங்களுக்கு எதிராக FIR பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெறவில்லை என்றும் ராஜ்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய முதல் அமர்வு, DVAC விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. அதே நேரத்தில், மனு தொடர்பாக DVAC-க்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனால், ரூ.4,000 கோடி மணல் அகழ்வு விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *