செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கியது.. தங்க திருச்சி வாகனத்தில் மலையப்ப சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கியது.. தங்க திருச்சி வாகனத்தில் மலையப்ப சுவாமி தரிசனம்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புகழ்பெற்ற நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (அக்டோபர் 12) கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி கோவில் முழுவதும் வண்ண மலர்களாலும், வண்ணமயமான மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.

தங்க திருச்சி வாகனத்தில் சுவாமி வீதி உலா!

பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று காலை, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து திருமலையில் உள்ள நான்கு மாட வீதிகளிலும் வாகன உலா நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியைத் தரிசனம் செய்து வழிபட்டனர்.

அக்டோபர் 20-ம் தேதி வரை விழா!

இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 12 முதல் 20-ம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு திருமலை முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட வாகன சேவை அக்டோபர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அக்டோபர் 19-ம் தேதி தங்க ரத ஊர்வலமும், நிறைவு நாளான அக்டோபர் 20-ம் தேதி சக்கர ஸ்நானமும் நடைபெறவுள்ளது.

நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள நிலையில், விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *