செங்கோட்டையன் சொன்ன அந்த 15 பேர்..? – கட்டெறும்பாக தேய்கிறதா அதிமுக..!
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைய 15 முக்கியப் புள்ளிகள் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதிமுகவின் சரிவு மற்றும் எதிர்கால குறித்து விரிவாக அலசுவோம்
எம்.ஜி.ஆர் கட்டியெழுப்பிய அதிமுக எனும் கோட்டையை உடைபடாமல் காத்து அதனை ஒரு எஃகு கோட்டையாய் மாற்றி கோட்டையின் ராஜமாதாவாய் நங்கூரமிட்டு அமர்ந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதிமுகவை கட்சி, தொண்டர் பலம், ஆட்சி, மத்திய அரசுடனான தொடர்பு என எல்லா மட்டத்திலும் தனக்கென தனி பாணியை ஏற்படுத்தி ஒரு Power Center ஆக அவர் வைத்திருந்தார். அவர் இருக்கும் வரை அதிமுகவை யாரும் நெருங்க முடியாது எனும் அளவுக்கு கட்டுக்கோப்பாக கட்சி இருந்ததாக இன்று அதிமுகவின் கடைக் கோடி தொண்டனும் சிலாகிக்கும் அளவுக்கு அவரது ஆளுமை இருந்தது. அப்படிப்பட்ட எஃகு கோட்டையான அதிமுகவின் இன்றைய வீழ்ச்சி என்பது தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

முடிவு மட்டுமல்ல.. அதுதான் சரிவின் தொடக்கமும்..
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் மேற்கொண்ட தர்ம யுத்தம், எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட ராஜந்தந்திர யுத்தம் என அதிமுக தொடர்ச்சியாக விமர்சனத்தை எதிர்கொண்டே வந்தது. ஒருகட்டத்தில் அவை இரண்டு குழுக்களாகி பின்னர் மூன்றாகி அதன் பின்னர் 4 மற்றும் 5 என நீண்டு இன்று எத்தனை குழுக்கள் , கோஷ்டிகள் இருக்கின்றன என எண்ணும் அளவுக்கு அது உயர்ந்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் தென் மாவட்டங்கள் vs கொங்கு மாவட்டங்கள் என போட்டி மிகக் கூர்மையாக்கப்பட்டன. அவை எல்லாவற்றையும் சமாளித்த எடப்பாடி பழனிசாமியால் தற்போதைய அரசியல் குழப்பத்தை சமாளிக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும்.
விவசாயி பிம்பம் To வாரிசு அரசியலுக்கான விதை..!
போகும் இடமெல்லாம் தன்னை ஒரு விவசாயி எனக் சொல்லிக் கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் கஷ்டப்பட்டு அரசியலுக்கு வந்தவன் என்றும் மு.க.ஸ்டாலின், உதயநிதி மாதிரி வாரிசு அரசியல் இல்லை என்றும் நிறுவ முயற்சிக்கிறார். ஒருபுறம் இப்படி இருக்க எடப்பாடி பழனிசாமி சொந்த கட்சியினர் வைக்கும் விமர்சனங்களில் மிக முக்கியமானது அவர் கட்சியின் அதிகார மட்டங்களில் தனது மகனை முன்னிலை படுத்துகிறார் என்பதுதான். எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைதான் தங்களுக்கு பிடிக்க வில்லை என பலர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

EPS-ஐ நெருக்கிய தேர்தல் தோல்விகள்..
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாக திமுக விமர்சனம் செய்து வருகிறது. ஒருகட்டத்தில் புழுகிக் கொண்டே இருந்த பரம்பரை அதிமுக உறுப்பினர்கள் ஆமாம் தோல்வியை ஈபிஎஸ் ஒப்புக்கொள்ளமாட்டாரா? அதற்கு தார்மீக பொறுப்பேற்க மாட்டாரா? என ஒரே அடியாக வெடித்து சிதறிவிட்டனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக சந்தித்தது வெறுமனே தேர்தல் தோல்வி மட்டுமல்ல. கட்சி மேலும், மேலும் பலகீனம் அடைவதற்கான புதிய கதவுகளையும் திறந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி மீது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வைத்த முக்கிய குற்றச்சாட்டே தான் முதலமைச்சராக வேண்டும் என்கிற ஒற்றைக் காரணத்திற்காக எதிரியான திமுகவோடு கூட்டணி வைக்க முயன்றார் என்பதே. இதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏக்கள் போர்ர்கொடி தூக்குவதற்கான முக்கிய காரணமாகும்.
யார் அந்த 15 பேர்..? பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் வெளியேறுவார்கள். அதிமுக தேய்ந்து கட்டெறும்பான கதைதான் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் மேலும் புதிய கிளப்பியுள்ளது. அப்படிப்பார்த்தால் மொத்தமாக 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என பேச்சு அடிபடுகிறது. இந்தச் செய்திகள் ஊடகங்களில் பேசுபொருளானது நான் 15 MLA-க்கள் எனச் சொல்லவில்லை 15பேர் என்றுதான் சொன்னேன் என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து கடைசியாக தவெகவில் இணைந்த முக்கியப் புள்ளி செம்மலை ஆவார். அந்த வரிசையில் மேலும் யார் யார் இணையப்போகிறார்கள் என்பதே இப்போது அனைவரது எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கிறது.

சரிவில் விளிம்பில் அதிமுக..??
அதிமுகவின் தற்போதைய நிலையை கண்டும் சாமானிய அதிமுக தொண்டன் கொதித்தெழுந்து உள்ளதாகவும் தங்களது கட்சியை காக்க ஒரு தேவதூதன் வரமாட்டார்களா?? என எதிர்ப்பார்த்துள்ள நிலையில் அந்த குழந்தையே நீங்க தான் என்கிற நடிகர் சத்யராஜின் பிரபல சினிமா வசனத்தை போல அந்த தேவதூதரே முதல்வர் விஜய் தான் என செங்கோட்டையன் போன்ற முன்னாள் அதிமுக தலைவர்கள் திருப்தியில் உள்ளனர்.
இதனையும் படியுங்கள் : வெற்றி கொடுத்த BOOST.. அடுத்து எத்தனை இடைத்தேர்தல்..? – Calculation-ல் விஜய்.. Confusion-ல் அதிமுக..!!
அடிக்கடி ஏதாவது ஒன்றை கட்சிக்குள்ளும் வெளியேயும் சர்ச்சையில் சிக்குவதாக நெட்டிசன்கள் கலாய்க்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒருபடி மேலே சென்று அதிமுகவும் நம்ம கட்சிதாங்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை காக்க வந்தவர்தான் விஜய் என தன் பங்கிற்கு சொல்லிவிட்டு சென்றது மீண்டும் அதிமுக மீண்டெழும் எனும் கனவோடு இருக்கும் தொண்டர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது எடப்பாடி பழனிசாமி முன் இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவெனில் அனைவரையும் ஒன்றிணைத்து பிரமாண்டமாக அதிமுகவை மீண்டும் கட்டமைத்து அதனை திமுக மற்றும் தவெகவுக்கு மாற்றாக தூக்கி நிறுத்த வேண்டும் என்பதுதான். அதிமுகவை தூக்கி நிறுத்தும் பணியில் எடப்பாடி பழனிசாமி சாதிப்பாரா, சறுக்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

One thought on “செங்கோட்டையன் சொன்ன அந்த 15 பேர்..? – கட்டெறும்பாக தேய்கிறதா அதிமுக..!”