மறைமலைநகரில் இன்று முதல் தற்காலிக பேருந்து சேவை தொடக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இன்று முதல் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டு, 2023ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதையடுத்து, பண்டிகைக் காலங்களில் பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில் மாதவரம், கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டியுள்ள நகராட்சி மைதானத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்று முதல் பேருந்து சேவை தொடங்கியுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஏற்பாடு சென்னையில் பண்டிகைக் கால போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
