ஹோசூரில் கட்டுமானப் பணி கட்டிடம் இடிந்து 3 பேர் உ*ரிழப்பு!
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஹோசூரில் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற கட்டுமானப் பணியின்போது கட்டமைப்பு திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உ*ரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 5ஆம் தேதி மாலை சுமார் 3.40 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உ*ரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
உ*ரிழந்தவர்கள் ஹோசூரைச் சேர்ந்த சீனிவாசன், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மைக்கேல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த நான்கு பேரும் ஹோசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கட்டுமானப் பணியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததும், கட்டமைப்பின் உறுதித்தன்மை குறைபாடுகளும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பொறியாளர் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உ*ரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய நிதியிலிருந்து தலா ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கட்டுமானப் பணிகளில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
