ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் பயணம் – தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் மக்கள் கூட்டம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில் தமிழகப் போக்குவரத்துத் துறை சார்பில் நவம்பர் 5 முதல் 7ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதற்காக கூடுதல் பேருந்துகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் பயணம் செய்திருப்பது தீபாவளி சொந்த ஊர் பயணத்தின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும், அடுத்தடுத்த நாட்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
