மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்.. ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூஜைகள் நிறைவு பெற்றதையொட்டி, நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18-ம் தேதி முதல் தொடங்கிய மண்டலாபிஷேக பூஜைகள் அக்டோபர் 2-ம் தேதி நிறைவு பெற்றன. நிறைவு நாளில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றதுடன், 108 கலசங்களில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி அதிகாலை முதலே கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அதிகாலை 5 மணிக்கு கோவில் திறக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, நேற்று நாள் முழுவதும் அம்மன் மற்றும் சுவாமி சன்னதி கதவுகள் மூடப்படாமல் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. சித்திரை வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பல மணி நேரத்திற்குப் பிறகு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாகத்தின் தகவலின்படி, நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரரை தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக மதிய நேரத்திலும் சன்னதி மூடப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர் விடுமுறை காரணமாக இன்றும் நாளையும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
