செய்திகள்

வாசிப்பு, எழுத்து, கணிதத் திறன் சோதனை! 2–9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வாசிப்பு, எழுத்து, கணிதத் திறன் சோதனை! 2–9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் ‘திறன் ப்ளஸ்’ திட்டம், தற்போது 2ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை மதிப்பீட்டுத் தேர்வுகள் அக்டோபர் 21 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

முன்னதாக, 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழித் திறன் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, தொடக்க வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்றலில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான கூடுதல் பயிற்சிகளை வழங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டுத் தேர்வு மூன்று நாட்கள் நடைபெறும். அக்டோபர் 21ஆம் தேதி தமிழ், 22ஆம் தேதி ஆங்கிலம், 23ஆம் தேதி கணிதம் ஆகிய பாடங்களில் மதிப்பீடு செய்யப்படும். தேர்வில் மொத்தம் 10 வினாக்கள் இடம்பெறும்; இதனை முடிக்க 40 நிமிடங்கள் வழங்கப்படும்.

தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள், சொற்களை அடையாளம் காணுதல், எளிய சொற்கள் மற்றும் வாக்கியங்களை வாசித்தல், எழுதுதல், எண்களை எழுதுதல், வாய்ப்பாடுகள் கூறுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்கள் மதிப்பிடப்படும். மேலும், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணிதச் செயல்பாடுகளிலும் மாணவர்களின் திறன் பரிசோதிக்கப்படும்.

2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் இந்த மதிப்பீட்டில் பங்கேற்க வேண்டும். 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 40 சதவீத மாணவர்கள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிந்ததும் ஆசிரியர்கள் விடைத்தாள்களைத் திருத்தி, மாணவர்களின் மதிப்பெண்களை அக்டோபர் 24 முதல் 31ஆம் தேதிக்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் மாணவர்களின் அடிப்படை வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தி, கற்றல் இடைவெளியைக் குறைக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *