இனி சினிமா வாய்ப்புக்கு ஆடிஷன் தேவையில்லையா? Influencers-ஐ தேடும் திரையுலகம்!
தமிழ் சினிமாவில் நடிகர்களைத் தேர்வு செய்யும் முறையில் தற்போது புதிய மாற்றம் உருவாகியுள்ளது. முன்பெல்லாம் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆடிஷன், போட்டோஷூட், ஸ்கிரீன் டெஸ்ட் எனப் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருந்தது. ஆனால், தற்போது இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் சினிமா வாய்ப்புகளுக்கான புதிய பாதையாக மாறியுள்ளன.

தங்களுடைய நடனம், நகைச்சுவை, நடிப்பு மற்றும் தனித்துவமான வீடியோக்கள் மூலம் இணையத்தில் பிரபலமடையும் Content Creators மற்றும் Influencers-க்கு தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஏற்கெனவே இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால், படங்களில் நடிக்க வைப்பதன் மூலம் விளம்பரமும் கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு உதாரணமாக, இன்ஸ்டாகிராம் நடன வீடியோக்கள் மூலம் பிரபலமான ரம்யா ரங்கநாதன், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


அதேபோல், VJ சித்து வி-லாக்ஸ் மூலம் பிரபலமான ஹர்ஷத் கான், ‘பாபா பிளாக் ஷீப்’, ‘டிராகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். VJ சித்துவும் தற்போது ‘டயங்கரம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் களமிறங்குகிறார்.

மேலும், ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி, சுதாகர் மற்றும் டிராவிட் உள்ளிட்டோரும் சினிமாவில் தடம் பதித்துள்ளனர்.


ஒருபுறம் சோசியல் மீடியா பிரபலங்கள் சினிமாவுக்குள் நுழையும் நிலையில், மறுபுறம் திரைப்படங்களின் புரமோஷன்களுக்கும் Influencers-ஐ படக்குழுவினர் நாடி வருகின்றனர். இதனால், சமூக வலைத்தளப் புகழ் என்பது தற்போது சினிமாவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
