சமையல் நிகழ்ச்சியில் சமந்தா! ‘செலிபிரிட்டி மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல்?
நடிகை சமந்தா ரூத் பிரபு, ‘செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ்’ என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சமையல் போட்டியில் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் தமிழ் வடிவமாக இது உருவாகியுள்ளது. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் தனது புதிய தமிழ் பொழுதுபோக்கு அலைவரிசையான சோனி விழா மூலம் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைக்காட்சியில் மட்டுமின்றி சோனி லிவ் ஓடிடி தளத்திலும் நிகழ்ச்சியைக் காணலாம்.
சமந்தாவுக்கு என்ன பொறுப்பு?
இந்த நிகழ்ச்சியில் சமந்தா தொகுப்பாளராகப் பங்கேற்று, போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி, சமையல் சவால்களைச் சுவாரஸ்யமாக வழிநடத்துகிறார். சமையல் திறமை, படைப்பாற்றல், நேர மேலாண்மை ஆகியவற்றைச் சோதிக்கும் வகையில் போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உணவு என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது என்றும், தமிழர்களின் உணவுப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடுவர்களாகப் பிரபல சமையல் கலைஞர்கள்!
இந்த நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், ‘மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் சஷி செலையா மற்றும் கோவையைச் சேர்ந்த சமையல் நிபுணர் ஸ்ரேயா அட்கா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர். ஆர்.ஜே. விஜய்யும் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்.
பிரபலங்கள் சமையலறையில் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் சமையல் திறமை மற்றும் போட்டியின் சுவாரஸ்யமான தருணங்கள் ஆகியவை நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருக்கும். சமையலையும் பொழுதுபோக்கையும் இணைக்கும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
