செய்திகள்

மழைக்காலத்தில் உஷார்! மின்விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் முக்கிய எச்சரிக்கை!

மழைக்காலத்தில் உஷார்! மின்விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் முக்கிய எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைய உள்ள நிலையில், மழைக்காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளைத் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. கனமழை, பலத்த காற்று, இடி மற்றும் மின்னல் காரணமாக மின்கம்பிகள் சேதமடையவும், மின்கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்கம்பிகள் அருகே செல்லாதீர்கள்!

மழைக்காலத்தில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிர்மானப் பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, அவற்றின் அருகே மழைநீர் தேங்கியிருந்தால் அந்தப் பகுதிகளில் நடந்து செல்லக்கூடாது.

சாலையிலோ, மழைநீரிலோ அறுந்து விழுந்த மின்கம்பிகளைக் கண்டால் அவற்றைத் தொடவோ, அப்புறப்படுத்தவோ முயற்சிக்கக் கூடாது. குழந்தைகள் உட்பட யாரும் அருகில் செல்லாதவாறு எச்சரித்து, உடனடியாக மின்வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஈரமான கைகளால் சுவிட்சுகளைத் தொடாதீர்கள்!

ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களை இயக்குவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டின் சுவர்களில் ஈரப்பதம் அல்லது மின்கசிவு இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால், மின்சாரப் பணியாளர்களின் உதவியை நாட வேண்டும்.

இடி, மின்னல் ஏற்படும்போது திறந்தவெளியில் நிற்பதையும், தனியாக உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்களின் கீழ் தஞ்சமடைவதையும் தவிர்க்க வேண்டும். மின்கம்பிகளில் விழுந்த மரக்கிளைகளைப் பொதுமக்களே அகற்ற முயற்சிக்கக் கூடாது.

மின்புகார்களுக்கு 24 மணி நேர உதவி!

மின்தடை, அறுந்த மின்கம்பிகள் மற்றும் மின்கசிவு தொடர்பான புகார்களைத் தெரிவிக்க, தமிழ்நாடு மின்வாரியத்தின் ‘மின்னகம்’ சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மின்விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.