செய்திகள்

விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைவு.. காய்கறி விலை மீண்டும் உயர்வு!

விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைவு.. காய்கறி விலை மீண்டும் உயர்வு!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள விளைச்சல் பாதிப்பு காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு தினசரி சுமார் 600 முதல் 680 லாரிகளில் காய்கறிகள் வரத்து இருக்கும் நிலையில், தற்போது வரத்து குறைந்து சுமார் 490 லாரிகள் அளவுக்கு மட்டுமே காய்கறிகள் வருவதாக கூறப்படுகிறது. இதனால் முக்கிய காய்கறிகளின் விலைகளில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தக்காளி, வெங்காயம், அவரைக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.80 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.40-ல் இருந்து ரூ.72 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் ரூ.40-ல் இருந்து ரூ.80 ஆகவும், வெண்டைக்காய் ரூ.70-ல் இருந்து ரூ.120 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

அதேபோல் பீன்ஸ், பாகற்காய், பீர்க்கங்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரத்து குறைந்து வருவதால் வரும் நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் காய்கறிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், விலை உயர்வு தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு தற்போது மொத்த சந்தையில் காணப்பட்டாலும், அதன் தாக்கம் சில்லறை விற்பனை நிலையங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அன்றாட சமையலுக்கு காய்கறிகளை வாங்கும் பொதுமக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *