செய்திகள்

ஆண்டுக்கு ரூ.23.9 லட்சம் சேமிப்பு! இந்தியாவின் முதல் LNG ரயிலை தொடங்கி வைத்தார் அமித் ஷா !

ஆண்டுக்கு ரூ.23.9 லட்சம் சேமிப்பு! இந்தியாவின் முதல் LNG ரயிலை தொடங்கி வைத்தார் அமித் ஷா !

இந்திய ரயில்வேயில் மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், நாட்டின் முதல் LNG-டீசல் இருமுனை எரிபொருள் ரயில் இன்று குஜராத்தின் சபர்மதி ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

டீசல் மீதான ரயில்வேயின் சார்பைக் குறைத்து, தூய்மையான மற்றும் மாற்று எரிபொருட்களை பயன்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலில் ஒரே இன்ஜின் LNG மற்றும் டீசல் ஆகிய இரு எரிபொருட்களிலும் இயங்கும் வகையில் தொழில்நுட்பம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. LNG கிடைக்கும் நிலைக்கு ஏற்ப எரிபொருளை மாற்றிப் பயன்படுத்த முடியும்.

40% வரை டீசலுக்கு மாற்றாக LNG

இந்தத் திட்டத்தின் கீழ், தலா 1,400 HP திறன் கொண்ட 2 Driving Power Cars (DPCs) LNG-டீசல் இருமுனை எரிபொருள் அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த அமைப்பின் மூலம் டீசல் பயன்பாட்டில் சுமார் 40% வரை LNG-யை மாற்றாக பயன்படுத்த முடியும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், மாற்றியமைக்கப்பட்ட இரு DPC-களிலும் 2,000 கி.மீட்டருக்கும் அதிகமான கள ஆய்வு மற்றும் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பத்தின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

ஆண்டுக்கு ரூ.23.9 லட்சம் சேமிப்பு

LNG-யின் பயன்பாட்டால் டீசல் செலவு குறைவதுடன், ரயில்வேயின் எரிபொருள் செலவிலும் சேமிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே கணக்கீட்டின்படி, ஒரு DPC மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.11.9 லட்சம் வரை சேமிக்க முடியும். 8 பெட்டிகள் கொண்ட முழு ரேக்கை இயக்கும்போது ஆண்டுக்கு சுமார் ரூ.23.9 லட்சம் எரிபொருள் செலவை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கும் பலன்

LNG பயன்பாட்டின் மூலம் டீசல் நுகர்வைக் குறைப்பதுடன், CO₂, NOx மற்றும் துகள்மாசு (PM) போன்ற மாசுபடுத்தும் வாயுக்களின் வெளியேற்றத்தையும் குறைக்க முடியும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு DPC-யிலும் சுமார் 2,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட LNG டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 950 முதல் 1,000 கிலோ வரை பயன்படுத்தக்கூடிய LNG-யை சேமிக்க முடியும். முழுமையாக நிரப்பப்பட்ட டேங்க், அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பின்படி சுமார் 444 கி.மீ. இயக்கத்திற்கு போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *