செய்திகள்

“மின்வெட்டு vs அரிவாள் வெட்டு” – தாராபுரத்தில் உதயநிதி பரபரப்பு பேச்சு

“மின்வெட்டு vs அரிவாள் வெட்டு” – தாராபுரத்தில் உதயநிதி பரபரப்பு பேச்சு

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர், தவெக ஆட்சிக்கு திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் கட்சி மாறிய விவகாரத்தையும் அவர் விமர்சித்தார்.

தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் திமுக எம்எல்ஏக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி மாறச் செய்யப்படுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இந்தக் கருத்துகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளின் விளக்கங்கள் வெளியாகவில்லை.

மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் சுமார் 30 நிமிடங்கள் பேசியபோது, 32 முறை ‘திமுக’ என்ற வார்த்தையை குறிப்பிட்டதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

“நாம் கூட திமுகவைப் பற்றி அவ்வளவு பேசியிருக்க மாட்டோம். அந்த அளவுக்கு முதல்வருக்கு திமுக மீது பயம்” என அவர் விமர்சித்தார்.

மேலும், சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனம் முன்வைத்த உதயநிதி, மீண்டும் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றால் மக்கள் பிரச்னைகளுக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுப்பார்களா என்பது கேள்விக்குறி எனக் கூறினார்.

தவெக அரசு அளித்ததாகக் கூறப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என விமர்சித்த அவர், “ரெண்டு பேருக்குத்தான் போட்டி… ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு” எனவும் கூறினார்.

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா நன்கு படித்தவர் என்றும், சட்டப்பேரவையில் தொகுதி மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடியவர் என்றும் கூறிய உதயநிதி ஸ்டாலின், அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *