“செப்.26 வரை டைம்!” – CEC ஞானேஷ் குமாருக்கு CJP அதிரடி கெடு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எனப்படும் CJP-யின் நிறுவனர் அபிஜித் தீப்கே 48 மணி நேர கெடு விதித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம், அதாவது SIR நடவடிக்கையில் முறைகேடுகள் மற்றும் வாக்காளர் பெயர்கள் நீக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து CJP பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், ஞானேஷ் குமார் நாளைக்குள், அதாவது செப்டம்பர் 26-ம் தேதிக்குள் பதவி விலகவில்லை என்றால், அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று மும்பையில் இருந்து நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கப் போவதாக அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
மும்பையில் தொடங்கும் போராட்டம், பின்னர் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், வாக்காளர் பட்டியல் தொடர்பான நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. ஆணையத்தின் செயல்பாடுகள் சட்டப்பூர்வமானவை என்றும், அதிகாரிகளுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் எந்த நிறுவனத்திலும் இயல்பானவை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால், CJP-யின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வரும் நாட்களில் இந்த விவகாரம் மேலும் கவனம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
