பருவமழை முன்னெச்சரிக்கை : CM Vijay தலைமையில் அவசர ஆலோசனை
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாட்டின் மிக முக்கியமான மழைக்காலமாக கருதப்படுவது வடகிழக்கு பருவமழை காலமாகும். ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இம்மழைக்காலம் நீடிக்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆண்டு மழைப்பொழிவில் சுமார் 48% முதல் 50% வரை இந்த பருவமழை காலத்தில்தான் நமக்கு நீர் கிடைக்கிறது.
கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், சம்பா சாகுபடி போன்ற முக்கிய விவசாயப் பணிகளுக்கும் இந்த மழைக்காலம் முதன்மை ஆதாரமாகும்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணித்திட மண்டல வாரியாக அமைச்சர் பெருமக்களும், மண்டலக் கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துறைசார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
காவிரி டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களும் இதில் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். பருவமழை நேரத்தில் மீட்பு நடவடிக்கைகள், நீர்நிலைகளை தூர்வாருதல், ஆக்ரமிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

