4 மாதம் தான் Time.. அதற்குள் TVK ஆட்சி கலைக்கப்படும் – அக்ரி சொல்லும் புது கணக்கு!

நான்கு மாதத்தில் தவெக ஆட்சி கலைக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கலசப்பாக்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த கலசப்பாக்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

மேலும், அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைந்தால், கலசப்பாக்கம் மற்றும் செங்கம் சட்டமன்றத் தொகுதிகளை மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முன்னேற்றம் அடைந்த தொகுதிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் தேர்தல் காலத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்ட பணிகளை நினைவுகூர்ந்து ஒவ்வொரு பூத், கிளைக் கழகம் மற்றும் அடிமட்ட அளவில் கட்சியினர் மேற்கொண்ட உழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக ஆட்சி நான்கு மாதத்தில் கலைக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் தேர்தலின்போது ஆளும் கட்சி பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படும் பல்வேறு வாக்குறுதிகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.

குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, இலவச சிலிண்டர், படித்த இளைஞர்களுக்கான உதவித்தொகை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் பற்றி இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கடன் தள்ளுபடி நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பேசிய அவர் கலசப்பாக்கம் பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த கலசப்பாக்கம் தொகுதி மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உழைப்பை பாராட்டிப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *