ஆதவ் அர்ஜுனா என்னை மாற்ற முயன்றார்.. திருமாவளவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவுடன் நடைபெற்ற பழைய அரசியல் சந்திப்பு குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
தனது கட்சியில் ஆதவ் அர்ஜுனா இருந்தபோது, கூட்டணி மற்றும் அரசியல் உத்தி தொடர்பாக தன்னிடம் பல்வேறு கருத்துகளை முன்வைத்ததாக திருமாவளவன் கூறினார். குறிப்பாக, கொள்கைகளை பேசுவதுடன் அதிகாரத்தை நோக்கிய அரசியல் நகர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஆதவ் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், டெல்லியில் தன்னை சுமார் 2 மணி நேரம் சந்தித்து பேசினார் என்றும், அப்போது அதிகாரம் தொடர்பான பல்வேறு வாய்ப்புகளை எடுத்துரைத்ததாகவும் திருமாவளவன் கூறினார். துணை முதலமைச்சர் பதவி உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டதாகவும், சில முக்கிய தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பேச வைத்ததாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
இதற்கு தான் தெளிவாக மறுப்பு தெரிவித்ததாகவும், அரசியல் பதவிக்காக கூட்டணியை மாற்றியதாக பின்னர் விமர்சனம் எழக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருந்ததாகவும் திருமாவளவன் கூறினார்.
மேலும், அம்பேத்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்வில் விஜய் பங்கேற்பது தொடர்பாகவும் ஆதவ் அர்ஜுனா தன்னிடம் பேசியதாக அவர் குறிப்பிட்டார். அப்போது அது தேர்தல் கூட்டணி தொடர்பான முயற்சி அல்ல என்றும், புத்தக வெளியீட்டு நிகழ்வாக மட்டுமே இருந்ததாகவும் திருமாவளவன் விளக்கினார்.
பின்னர் ஆதவ் அர்ஜுனா தனது அரசியல் முடிவை மாற்றி தவெகவில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தன்னிடம் தெரிவித்ததாகவும், அதற்கு தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான திருமாவளவனின் பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
