செய்திகள்

பெண்களுக்கான இலவச பயணம் விரிவாக்கம்.. ‘வெற்றிப்பயணம்’ திட்டம் தொடக்கம்!

பெண்களுக்கான இலவச பயணம் விரிவாக்கம்.. ‘வெற்றிப்பயணம்’ திட்டம் தொடக்கம்!

தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் விரிவாக்கமான ‘வெற்றிப்பயணம்’ திட்டம் இன்று (அக். 2) தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் ஏற்கனவே சாதாரண நகரப் பேருந்துகளில் வழங்கப்பட்டு வந்த இலவசப் பயண வசதி, தற்போது மேலும் பல வகையான அரசு பேருந்துகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. Express, LSS, Deluxe, Mofussil Ordinary மற்றும் 40 கி.மீ.க்கு மேல் இயக்கப்படும் Ghat Ordinary பேருந்துகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 12,692 அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பேருந்துகள், ஏழு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மொத்த பேருந்துகளில் சுமார் 69 சதவீதம் ஆகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தினமும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் கல்லூரிகளுக்கும், பணிக்குச் செல்லும் பெண்கள் பணியிடங்களுக்கும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும்.

மேலும், இத்திட்டத்தில் வருமான உச்சவரம்போ அல்லது ஒரு நாளில் எத்தனை முறை பயணிக்க வேண்டும் என்ற எண்ணிக்கை வரம்போ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுடன் திருநர்களும் இத்திட்டத்தின் பயனைப் பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடனான (ETM) தொழில்நுட்ப இணைப்புப் பணிகளும் முன்னதாக நிறைவு செய்யப்பட்டதாக அரசு தெரிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *