பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக திட்டம்: தமிழக அரசு அதிரடி முடிவு?
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டம் தொடர்பாக தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் உள்ள சுமார் 25.5 ஏக்கர் நிலத்தில், ரூ.1,200 கோடி மதிப்பில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கான அரசாணையும் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதற்கிடையே, புதிய தலைமைச் செயலக திட்டம் இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுதொடர்பாக பொதுத்துறை செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், தலைமைச் செயலகத்திற்காக தேர்வு செய்யப்படும் புதிய இடம் குறித்த விவரங்களுடன் புதிய அரசாணை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த அரசாணை ரத்து தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் வரை, இதை தகவல் வெளியாகியுள்ளது என்ற நிலையிலேயே பார்க்க வேண்டும்.
