விஜய் சென்ற மாட்டு வண்டியை ஓட்டியது யார்?.. தேடப்படும் நபர் என எழுந்த சர்ச்சை – திமுக, அதிமுக கேள்வி!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் விஜய் மாட்டு வண்டியில் பயணம் செய்த விவகாரம் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பயணித்த மாட்டு வண்டியை ஓட்டியவர், தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வருபவர் என திமுக மற்றும் அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட பொட்டிக்காம்பாளையம் பகுதியில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி தவெக வேட்பாளர் சத்யபாமா பிரசாரத்துக்கு சென்றபோது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசோக் உள்ளிட்ட பலர் மீது குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வழக்கில் அசோக் மீது நடவடிக்கை நிலுவையில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தாராபுரத்தில் விஜய் நடத்திய ரோடு ஷோவின்போது அசோக் மாட்டு வண்டியை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசாரால் தேடப்படும் நிலையில் உள்ள ஒருவர் எப்படி முதல்வருடன் மாட்டு வண்டியில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார் என திமுக மற்றும் அதிமுக தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், அசோக் உள்ளிட்ட சிலரை தவெகவில் இணையுமாறு மிரட்டியதாகவும் அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தவெக தரப்பில் இருந்து வெளியாகும் விளக்கம் என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், விஜய்யின் மாட்டு வண்டி பயணத்தைச் சுற்றி எழுந்துள்ள இந்த சர்ச்சை தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
