தென் சென்னை மக்களே கவனம்.. 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!
சென்னையின் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 10-ம் தேதி காலை 9 மணி முதல் அக்டோபர் 11-ம் தேதி காலை 9 மணி வரை, 24 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்தின் தகவலின்படி, நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களின் சில பகுதிகள் பாதிக்கப்படும்.
அடையாறு மண்டலத்தில் திருவான்மியூர், பள்ளிப்பட்டு, கொட்டூர் கார்டன், ஆர்.கே. மடம் சாலை, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், பெருங்குடி மண்டலத்தில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
அதேபோல், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் நீலாங்கரை, அக்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, ஒக்கியம்-துரைப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளும் பாதிக்கப்பட உள்ளன.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு குடிநீர் டேங்கர்களை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
