செய்திகள்

சென்னை ஏர்போர்ட்டில் புதிய டி5 டெர்மினல்; மேம்பாலத்துக்கு முன் அண்ணா பல்கலைக்கழகம் செய்யப்போகும் முக்கிய ஆய்வு !

சென்னை ஏர்போர்ட்டில் புதிய டி5 டெர்மினல்; மேம்பாலத்துக்கு முன் அண்ணா பல்கலைக்கழகம் செய்யப்போகும் முக்கிய ஆய்வு

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும் வகையில் புதிய T5 டெர்மினல் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய முனையத்தை நகரின் முக்கிய சாலைப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

T5 முனையம் விமான நிலையத்தின் தொலைதூரப் பகுதியில் அமையவுள்ளதால், பயணிகள் மற்றும் வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் தனி அணுகுச்சாலை தேவைப்படுகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை 32-ல், மாதா பொறியியல் கல்லூரி அருகில் இருந்து புதிய மேம்பால வழித்தடம் அமைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி அடையாறு ஆற்றின் அருகே அமைய உள்ளதால், அதன் தூண்கள் ஆற்றின் இயற்கையான நீரோட்டம் மற்றும் மழைக்கால வெள்ளநீர் செல்லும் பாதையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்வள மையம் மூலம் இரண்டாம் கட்ட நீரியல் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வில், கட்டுமானத்தால் ஆற்றின் நீரோட்டத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேம்பாலத்தின் வழித்தடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், புதிய திட்டத்துக்கு ஏற்ப மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் தொடர்ச்சியாக T5 டெர்மினல் மற்றும் மேம்பாலத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகர் தேர்வு செய்யப்பட உள்ளார். DPR தயாரிக்க சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *