செய்திகள்

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்.. காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை கட்டுப்பாடு!

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்.. காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை கட்டுப்பாடு!

பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 11) சென்னை வருகை தர உள்ளதை முன்னிட்டு, சென்னையின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்களைச் சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை வணிக மற்றும் கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்?

1. ஜிஎஸ்டி சாலை – தாம்பரம்: தாம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் குன்றத்தூர் சாலை நோக்கித் திருப்பிவிடப்படும். பல்லாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் விமான நிலையச் சந்திப்பு அருகே தாம்பரம் நோக்கித் திருப்பிவிடப்படும்.

2. ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை: கோயம்பேட்டிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அசோக் நகர் இரண்டாவது அவென்யூ பகுதியில் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படும். அசோக் பில்லர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் சிபெட் சந்திப்பில் கிண்டி தொழிற்பேட்டை நோக்கித் திருப்பிவிடப்படும்.

3. மவுண்ட் – பூந்தமல்லி சாலை: போரூர் சுங்கச்சாவடி பகுதியில் வரும் வாகனங்கள் மதுரவாயல் நோக்கித் திருப்பிவிடப்படும். ராமாபுரம் சந்திப்பிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

4. சர்தார் படேல் சாலை மற்றும் வேளச்சேரி: பழைய மகாபலிபுரம் சாலை (OMR), சர்தார் படேல் சாலை மற்றும் வேளச்சேரி பிரதான சாலையில் குறிப்பிட்ட சந்திப்புகளில் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்படும்.

5. அண்ணா சாலை: லோக் பவன் பகுதியை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு எம்.சி. ராஜா யு-டர்ன் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்!

பிரதமரின் பயணத் திட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, வாகன ஓட்டிகள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, போக்குவரத்துக் காவல்துறை அறிவிக்கும் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக, விமான நிலையம், போரூர், கிண்டி, நந்தம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்பவர்கள் கூடுதல் பயண நேரத்தை ஒதுக்கிக்கொள்வது நல்லது.

போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான சமீபத்திய அறிவிப்புகளைப் பின்பற்றி, தேவையற்ற நெரிசலைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *