கிராமப்புற மக்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை! ரூ.100 கோடி ஒதுக்கிய தமிழக அரசு!
தமிழகத்தில் கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ், கிராமப்புறங்களில் வசிக்கும் தகுதியுள்ள குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு வருமானம் கிடைப்பதுடன், அவர்களின் அன்றாட குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவும் உதவியாக உள்ளது.
இதற்காக ‘வெற்றி 150’ என்ற திட்டத்தின் கீழ் 2026–27 நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 125 நாட்கள் வேலைவாய்ப்பைப் பயன்படுத்தி முடித்துள்ள தகுதியான குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்படும்.
பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், தனித்து வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள் உள்ளிட்டோருக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம் தகுதியுள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு மொத்தம் 150 நாட்கள் வரை வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு ஏற்படும்.
