மெட்ரோ தயார்… திறப்பு மட்டும் பாக்கி! பூந்தமல்லி – வடபழனி வழித்தடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
சென்னை மெட்ரோவின் 2-ம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ மெட்ரோ வழித்தடம் பணிகள் முடிந்து, பயணிகள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.
இந்த வழித்தடத்தில் மொத்தம் 11 உயர்மட்ட நிலையங்கள் உள்ளன. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததுடன், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதி அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், திறப்பு விழாவுக்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாததால், மெட்ரோ சேவை தொடங்கப்படாமல் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மூலம் இந்த வழித்தடத்தை திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பிரதமர் அலுவலகத்திலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தேதி வெளியாகவில்லை.
செப்டம்பர் இறுதியில் திறப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் முதல் வாரத்தில் திறப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வந்தால், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ சேவை கிடைக்கும்.
