செய்திகள்

அக்டோபர் 11-ல் மெட்ரோவில் மோடி – விஜய் பயணம்.. பூந்தமல்லி முதல் போரூர் வரை பாதுகாப்பு தீவிரம்!

அக்டோபர் 11-ல் மெட்ரோவில் மோடி - விஜய் பயணம்.. பூந்தமல்லி முதல் போரூர் வரை பாதுகாப்பு தீவிரம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளில் முக்கியமான பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் அக்டோபர் 11-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். விழாவில் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ் மொத்தம் சுமார் 118 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பூந்தமல்லி – வடபழனி இடையேயான பணிகள் நிறைவடைந்து, ரயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அக்டோபர் 11-ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிறகு, பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜயுடன் இணைந்து பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், போரூரில் இருந்து சாலை வழியாக சென்னை ஐஐடி வளாகத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். வேலூர் விமான நிலையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களும் இந்த நிகழ்வில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் இணைந்து அவர் பங்கேற்கும் முக்கியமான அரசு நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. இதனால் அக்டோபர் 11-ம் தேதி நடைபெற உள்ள மெட்ரோ தொடக்க விழா அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *