“எங்கள் ரூட் ஒரே ரூட்.. Straight ரூட்!” – மதுராந்தகத்தில் விஜய் அதிரடி
மதுராந்தகம் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், TVK சார்பில் போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேலை ஆதரித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய விஜய், “எப்போதும் போல உங்கள் வீட்டு பிள்ளையாக, மகனாக, அண்ணனாக, தம்பியாகத்தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்” என்றார்.
மேலும், பெண்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி, “உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? உங்கள் TVK ஆட்சிக்கு வரக்கூடாதா?” என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
திமுகவை விமர்சித்த விஜய், அந்தக் கட்சியினர் தன்னைப் பற்றி அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வருவதாக குற்றம்சாட்டினார். தனது அரசியல் வெற்றிக்கும் தமிழக மக்களே காரணம் என்றும், கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே 35 சதவீத வாக்கு வங்கி கிடைத்ததாகவும் விஜய் கூறினார்.
தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து மு.க.ஸ்டாலின் பேசியதாக கூறப்படும் பழைய கருத்துகளை விஜய் சுட்டிக்காட்டினார். ஸ்டாலின் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களும் ஜெயலலிதா குறித்து பேசியதாக கூறிய விஜய், இதையெல்லாம் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார்.
அதிமுகவையும் விமர்சித்த விஜய், திமுகவுடன் மறைமுகமாக அதிமுக இணைந்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவை விமர்சித்தவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டபோதே, அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது வெளிப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, “யார் என்ன கூவினாலும் நமக்கு என்ன? நம்ம ரூட் ஒரே ரூட்தான்… ஸ்ட்ரைட் ரூட்தான்” எனக் கூறி தனது உரையை விஜய் நிறைவு செய்தார்.
மேலும், ஸ்டாலினை விமர்சிக்கும் போதும், “வாழ்க்கை ஒரு வட்டம்… அவர் என் ஸ்வீட் அங்கிள்” என விஜய் குறிப்பிட்டது அவரது பிரசாரத்தில் கவனம் பெற்றது.
