வெளிநாடு போகாமலே ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.. சென்னையில் UWA-வின் புதிய கேம்பஸ்!
சென்னை வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள One National Park வளாகத்தில் UWA சென்னை கேம்பஸ் செயல்பட உள்ளது. சுமார் 70,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் நவீன வகுப்பறைகள் மற்றும் மாணவர்களின் கற்றல் தேவைகளுக்கான வசதிகள் இடம்பெறுகின்றன.
இந்தியாவில் UWA-வின் இரண்டாவது வளாகமாக சென்னை அமைகிறது. இதற்கு முன்பாக கடந்த செப்டம்பர் மாதம் மும்பையில் UWA தனது முதல் இந்திய வளாகத்தை தொடங்கியது. தற்போது சென்னையிலும் செயல்பாடுகள் தொடங்க உள்ளதால், தமிழக மாணவர்களுக்கு புதிய சர்வதேச கல்வி வாய்ப்பு கிடைத்துள்ளது.
சென்னை வளாகத்தில் Computer Science, Data Science, Business Management, Advanced Computer Science with Artificial Intelligence உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளும், Master of Information Technology மற்றும் MBA போன்ற முதுநிலைப் படிப்புகளும் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக Artificial Intelligence, Data Science, IT மற்றும் Business போன்ற எதிர்கால வேலைவாய்ப்புகளுடன் தொடர்புடைய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மேலும், இந்தியாவில் படிப்பை தொடங்கி பின்னர் UWA-வின் சர்வதேச கல்வி வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய கல்வி வலையமைப்புடன் இணையும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு கிடைக்கும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை வளாகத்திற்கான மாணவர் Orientation அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது என்றும், வழக்கமான வகுப்புகள் அக்டோபர் 19, 2026 முதல் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் சர்வதேச உயர்கல்விக்கான புதிய பாதை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
