அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முடியாது – தமிழக அரசு அதிரடி முடிவு!
தமிழகத்தில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படாது என மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நர்மல் குமார் தெரிவித்துள்ளார். வரும் மாதங்களில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், மின்சாரத்தை வாங்குவதற்காக நடத்தப்பட்ட குறுகிய கால டெண்டரில் தனியார் நிறுவனங்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ.41.50 வரை விலை குறிப்பிட்டுள்ளன.
இந்த டெண்டரில் ரூ.37 முதல் ரூ.41 வரை நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் மின்சாரம் வாங்க அரசு தயாராக இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான மின்சாரத்தைச் சமாளிக்கும் அளவுக்கு மாநிலத்தில் போதிய மின்சார இருப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் திட்டத்தைக் கைவிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்கால மின்சாரத் தேவையைச் சமாளிக்கும் வகையில் நடுத்தர மற்றும் நீண்டகால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளுக்கான தேவையைக் கருத்தில் கொண்டு புதிய டெண்டர்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கொள்முதல் செலவைக் கட்டுப்படுத்துவதுடன், மாநிலம் முழுவதும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
