அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி? நவ.13-ல் புதிய வானிலை மாற்றம்!
வங்கக்கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. அதன்படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், புதிதாக உருவாகவுள்ள இந்த வானிலை அமைப்பு கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானால் அதன் நகர்வு, தீவிரம் மற்றும் நிலை ஆகியவற்றைப் பொறுத்து தமிழகத்தில் மழையின் தாக்கம் அமையக்கூடும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வானிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் அடுத்தடுத்த நாட்களில் வங்கக்கடலில் உருவாகும் வானிலை மாற்றங்களை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வு மற்றும் மழை தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
