வடகிழக்கு பருவமழை தீவிரம்! தமிழகத்தில் 60 செ.மீ. வரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கணித்துள்ளார்.
அதன்படி, அக்டோபர் 20 முதல் டிசம்பர் 20 வரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்தாண்டு 50 முதல் 60 செ.மீ. வரை மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கும் மழை, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி, உள் மாவட்டங்களிலும் பருவமழையின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மழை தீவிரமாகும் காலகட்டத்தில் கனமழை, நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிப்பு மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு அக்டோபர் மாதத்தின் பிற்பகுதி முக்கியமான காலகட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.
