நீலகிரியில் கனமழை, நிலச்சரிவு அபாயம்! மாலை 6 மணி முதல் போக்குவரத்துக்குத் தடை !
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மிக கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்தும், நிலச்சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தியுள்ளார்.
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டிக்குச் செல்லும் மக்கள் மலைப்பாதைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலச்சரிவு, மரங்கள் மற்றும் பாறைகள் சரிந்து விழுதல், திடீர் வெள்ளப்பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், நீர்வீழ்ச்சிகள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் பொதுமக்கள் வெளியிடங்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வாகனங்களை மரங்களின் அடியில் நிறுத்தக்கூடாது என்றும், மழை பெய்யும்போது மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளைத் தொடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு, அரசுப் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் பொதுமக்கள் மாவட்ட அவசரகாலக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா எண் 1077 அல்லது 0423-2450034, 0423-2450035 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
